தளிர்

தளிர்
தேன் சிந்தும் பூஞ்சோலை!

Tuesday, June 18, 2013

ராஜ்யசபா தேர்தலும் அம்மாவின் கணக்கும்!

ராஜ்ய சபா தேர்தலை ஓட்டி தமிழக அரசியல் களை கட்டியுள்ளது. இந்த முறை ஆறு எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சூழலில் அதிக எம். எல். ஏக்களை உடைய அதிமுகவிற்கே அதிக வாய்ப்பாக நான்கு எம். பிக்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தது.
    ஐந்தாவது நபர் கூட்டணிக் கட்சிக்கு தோழமை அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தா. பாண்டியன் களத்தில் குதித்தார். சாதரணமாகவே ஆட்சியில் கூட்டணியில் இருப்பவருக்கு துதிபாடும் இனத்தை சேர்ந்தவரான தா. பா. அம்மா எப்படியும் தம்மை எம். பி ஆக்கி விடுவார் என்று எம்பி எம்பி குதித்து கொண்டிருந்தார்.
     ஆறாவது இடத்திற்கு திமுக மற்றும் தேமுதிக இடையே போட்டி இருந்தது. தேமுதிக முதல் முறையாக ராஜ்யசபாவில் இடம்பிடித்து சுதிஷை அங்கே அலங்கரிக்க முடிவு செய்து திமுகவுடன் பேரம் நடத்தியது. தன் பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை கொண்ட மு.க. வோ இப்பொது பழம் கனிக்கே! அடுத்தமுறை கனிந்தால் பார்க்கலாம் என்ற ரீதியில் பேச தேமுதிக சுதாரித்துக் கொண்டது. அது தனித்து நின்றாலும் பிரயோசனம் இல்லை! திமுகவுக்கு ஆதரவு அளித்தால் ஊழலுக்கு துணை போன கனிமொழியை ஆதரித்ததாக சச்சரவு வரும் என்று இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது தன்னுடைய எம். எல் ஏக்களில் ஏழு பேரை அதிமுகவிற்கு தாரை வார்த்த அது இன்னும் எத்தனை பேர் காலை வாருவார்கள் என்று தெரியாமல் உள்ளது.
   ஒரு எம்பிக்கு 34 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுக எளிதாக நான்கு எம்பிக்களை வென்றுவிடும். ஐந்தாவது நபருக்கே அடுத்தவர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த இடத்தை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்காமல் போட்டியிட வேட்பாளர் அறிவித்து கூட்டணியினரின் காலை வாரினார் ஜெ.
     தன்னிடம் உள்ள 151 உறுப்பினர்கள் தவிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்களை இழுத்து ஐந்தாவது நபரை வெற்றி பெற வைக்கலாம் என்பது ஜெயின் கனவாக இருந்தது. ஆனால் தேமுதிகவில் இருந்து போதிய எம்.எல்.ஏக்களை இழுக்க முடியவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் அதிமுக ஆதரவு நிலையில் இருந்து விலகி இந்திய கம்யூனீஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தது. இரண்டு கம்யூனிஸ்ட்களும் இணைந்து கொண்டதால் அனாவசியமாக ஒரு நட்பு கட்சியை பகைத்துக் கொண்ட நிலையே அதிமுகவிற்கு ஏற்பட்டது.
 
   இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ராஜா நேற்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து திடீரென ஜெ ஓர் அதிரடி அறிவிப்பு செய்தார். இந்தியகம்யூனிஸ்ட்டிற்கு ஆதரவு தருவதாகவும் ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்து மற்ற கட்சிகளுக்கு கலக்கம் தந்துள்ளார். இதில் பாவம் பாதிக்கப்பட்டது தங்கமுத்துதான். மூன்று முறை லோக்சபாவிற்கு போட்டியிட்டு தோற்ற அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. ஆனால் இதெல்லாம் அம்மாவின் கட்சியில் சர்வ சகஜம். அம்மாவின் இந்த விளையாடல் இப்போது கலக்கத்தை தந்திருப்பது திமுகவிற்கு மட்டுமே தேமுதிகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் கனிமொழிக்கு இப்போது காங்கிரஸின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால் காங்கிரஸ் ஆதரவை தேமுதிக முன் கூட்டியே கேட்டுவிட்டது. இதனால் இப்போது திமுகவா தேமுதிகவா என்ற சிக்கலில் காங்கிரஸ் உள்ளது.
      தேமுதிக போட்டியிடாவிட்டால் திமுகவின் கனிமொழி எளிதாக எம். பி ஆகிவிடுவார். இப்போது தேமுதிக களத்தில் இருப்பதால் அந்த கட்சி மற்ற கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.  .
  தேமுதிகவின் இளங்கோவன் களத்தில் உள்ளார். அவருக்கு நேரடிப்போட்டியாக கனிமொழி உள்ளார். இந்த மோதலில் கனிமொழிக்கு ஆதரவு தந்து தேமுதிக விலகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில் தேமுதிக மொத்த எம்.எல்.ஏக்களில் ஏழுபேர் அதிமுக ஆதரவு ஆறுபேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளதால் 13 பேர் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை! 34 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் வெறும் 16 பேர் போட்டியிடுவது திமுகவிற்கு பின்னடைவை தரும். 151 எம்.எல்.ஏக்களை உடைய அதிமுக 4 இடங்களில் வென்றுவிடும் அதிமுக ஆதரவுடம் இந்தியகம்யூனிஸ்ட் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
   திமுகவிற்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர் இன்னும் 11 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில்  கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தந்து அந்த  உறுப்பினர்களின் ஆதரவை திமுக பக்கம் செல்லாதவாறு தடுத்து உள்ளார் ஜெ. அதே சமயம் தேமுதிகவின் வாய்ப்பையும் பறித்து உள்ளார். மார்க்சிஸ்ட் தேமுதிகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாக தகவல்கள் கசிந்தன. ஜெவின் இந்த முடிவு அதை நிறுத்திவைக்கும்.
   தேமுதிக தன் ராஜ்ய சபா கனவை ஒத்திவைக்கவேண்டிய சூழலுக்கு இதனால் தள்ளப்பட்டுள்ளது.  திமுகவும் காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. ஆனால் எளிதாக ஐந்து இடங்களை கைப்பற்றப் போகிறது அதிமுக கூட்டணி. மீண்டும் திமுக காங்கிரஸ் பால் சென்றால் அதன் செல்வாக்கும் குறையும் இப்படி இரட்டை அடி கொடுத்து உள்ளார் ஜெயலலிதா. ஒரு காலத்தில் பலமான கட்சியாக பல மந்திரிகளுடன் வலம் வந்த திமுக இன்று ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு கையேந்த வேண்டிய சூழல் காலத்தின் கோலமே!  தன் முதல் தந்திரம் பலிக்கா விட்டாலும் இந்திய கம்யூனிஸ்டிற்கு ஆதரவு தந்து தேமுதிகவின் வாய்ப்பை கெடுத்து ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார் ஜெ. இந்த தந்திரம் பலிக்குமா?பொறுத்திருந்து பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

Monday, June 17, 2013

புகைப்பட ஹைக்கூ 33

புகைப்பட ஹைக்கூ 32


  கரை போட்டது
  கடற்கரைக்கு
  மக்கள் வெள்ளம்!

  மக்கள் வெள்ளத்தில்
  மறைந்து போனது
  கடல்!

  உப்பென்றாலும்
  உவகைதான்!
  கடல்!

  பேரலைகளை
  பெயர்த்தது
  மக்கள் பேரலை!

   மாசில்லா காற்று
   காசில்லா காற்று
   தந்தது கடற்கரை!

   மக்கள் கூட்டம் கண்டு
   மயங்கி வந்தது
   கடல்!

   கறுத்தாலும்
   ஈர்த்தது
   கடல்!

  அள்ளிச் சென்று
  தள்ளிவிட்டது
  கடலலை!

  ஓயாத அலைகள்!
  ஓய்வின்றி ரசித்தனர்
  மக்கள்!

   கால் தொட்ட அலைகள்
   கரைந்தது
  மனசு!

  பொழுது கரைகையில்
  அதிகரித்தது கூட்டம்
  மெரினா!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


உள்ளேவும் வெளியேவும்! தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்!

 தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை ,தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

வாரிய தலைவர்கள் நியமனம்: இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி ( சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம் ), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு ), அருண்மொழித்தேவன் ( சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் ( பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு ) , ரவிச்சந்திரன் ( வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்கி: அதிரடிக்கு பெயர் போன ஜெ இப்படி அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்தால் ஆட்சிக்கால இறுதியில் அனைவரும் முன்னால் மந்திரிகளாகத்தான் இருப்பார்கள் போல! என்ன  ஒருவராய் சம்பாதிக்காமல் அனைவரும்  சம்பாதிக்க வழி செய்கிறார்.                                                                             தகவல் உதவி: தினமலர்

Sunday, June 16, 2013

அஜித்தின் புதிய படம் விநாயகம் பிரதர்ஸ்!

அஜித்தின் புதிய படம் விநாயகம் பிரதர்ஸ்!


தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களில் ஒருவர் அஜித். நிறைய புதுமுக இயக்குனர்களை வளர்த்து தானும் வளர்ந்தவர். நிறையபேருக்கு உதவிகள் செய்திருப்பவர். மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். இப்படி பல ப்ளஸ் இருந்தாலும் இப்போது ஒரு மைனஸ் அவரை பாதித்துக் கொண்டு இருக்கிறது.
   அவரது 53வது படத்தை இயக்கிய விஷ்ணு வர்த்தன் ஒரு வருட காலமாக படத்திற்கு பெயர் வைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். டீசர் வெளியிட்ட போது கூட படத்தில் பெயர் வெளியிடவில்லை. முதலில் இந்த படத்திற்கு வலை என்று பெயரிடப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அதை அஜித்தும் விஷ்ணு வர்த்தனும் மறுத்தார்கள். புதியபடத்திற்கு பெயர் விரைவில் வைக்கப்படும் என்று சொன்னார்கள்.
  சுமார் ஒருவருட காலமாக அஜித்தின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அவரது படத்தின் பெயர் கூட தெரிவிக்காமல் இருப்பதால் கொதித்துப் போயுள்ளார்கள். எங்களிடம் சொல்லுங்கள் நாங்களே பெயர் வைக்கிறோம் என்ற அளவில் இப்போது ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ள போதும் இன்னும் பெயர் வைக்காமல் திண்டாடி வருகிறார் விஷ்ணுவர்த்தன்.
    . இந்த நிலையில், அஜீத்தின் 54வது படத்தை இயக்கும் சிறுத்தைப்பட இயக்குனர் சிவா, அப்படத்தின் தலைப்பு சுராங்கனி என்று முதலில் வைத்திருந்தவர் இப்போது விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைத்து விட்டாராம். இப்படத்தில் அஜீத் மற்றும் அவரது தம்பியாக விதார்த் உள்பட சில நடிர்களும் நடிக்கிறார்கள். படத்தில் அஜீத்தின் கேரக்டரின் பெயர் விநாயகம் என்பதால், விநாயகம் பிரதர்ஸ் என்ற பெயரை அவர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று ரசிகர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். இப்படிதான் போன படத்தின் பெயர் வலை என்று தகவல் வந்தது. அப்புறம் பெயர் வைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அஜித்தே வந்து அதிகாரப் பூர்வமாக அறிவித்தாலன்றி நாங்கள் நம்பத்தயாரில்லை என்கிறார்கள் ரசிக கண்மணிகள்.
    பல வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகரின் படத்திற்கு தலைப்பு அதுவும் தலக்கே தலைப்பு கிடைக்கல என்பது மைனஸ் பாயிண்ட்தானே!  விரைவில் இதை ப்ளஸ் பாயிண்ட் ஆக்குவார் தல என்று எதிர்ப்பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18


தமிழார்வம் காரணமாக தொடங்கப்பட்ட இந்த பகுதி இவ்வளவு பகுதிகள் கடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை! கணிசமான பார்வையாளர்கள் இந்த பகுதியை படித்து வருவது மகிழ்ச்சி! முதலில் மேம்போக்காக எழுதப் பட்ட இந்த பகுதி தற்போது இலக்கண இலக்கியங்களையும் எழுதிவருகிறது. கடந்த சில வாரங்களாக சில இலக்கணப் பகுதிகளை படித்தோம். இன்று கொஞ்சம் இலேசாக இலக்கணம் தவிர்த்து சிலவற்றை பார்க்க போகிறோம்.
    தமிழில் வகைப் படுத்துதல் என்பது சிறப்பு! பொதுவாகவே மனிதர்கள் எனில் நல்லவன் கெட்டவன் என வகைப்படுத்தலாம். சினிமா என்றால் கிராமியக்கதை, க்ரைம்கதை, காதல்கதை, நகைச்சுவைகதை என வகைப்படுத்தலாம். இலக்கியம் என்றால் நாவல்கள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சங்க காலப் பாடல்கள் என வகைப்படுத்தலாம் அல்லவா?
  அதே போல தமிழின் தொன்மையான வகைப்படுத்தல் சிலவற்றை இப்போது காண்போம்.
வள்ளல்கள் என்றால் கடையேழு வள்ளல்களை நினைவு படுத்துவோம் அல்லவா? இதைப்பற்றி பிலாசபி பிரபாகரன் எழுதி இருந்தார் என்று ஞாபகம். கடையெழு வள்ளல்கள் தவிர்த்து தலை இடையெழு வள்ளல்களும் இருந்துள்ளார்கள் அவர்களை அறிந்து கொள்வோம்.

முதல் ஏழூ வள்ளல்கள் அல்லது தலைஎழுவள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன்,செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி.
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்.
கடையேழு வள்ளல்கள்:  பாரி,ஆய், காரி, நள்ளி, அதியமான், பேகன், ஓரி.

அகத்தினைகள் 7 : கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை,
அரசசின்னம்10: படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், மாலை, செங்கோல்.
அளவுவகை 4: எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்
அழகுவகை 8: அம்மை, வனப்பு,தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன் இழை.
அறுமுறைவாழ்த்து6: முனிவர், பார்ப்பனர், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு
ஆறுவகை சக்ரவர்த்திகள்6: அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புரூரவன், சகரன், கார்த்தவீரியன்.
இசைவகை 3 மந்தரம், மத்திமம், தாரம்.
இசைவகை6 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி.
மேலுலகம் ஏழு: பூலோகம்,புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
கீழுலகம் ஏழு: அதலம், விதலம்,சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.
எட்டுமலைகள்: இமயம் மந்தரம், கயிலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தாமதனம்.
ஐங்கூந்தல்; கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள்.
ஐங்குரவர்: அரசன், ஆசிரியன்,தாய், தந்தை, தமையன்.
ஐங்காயம்: கடுகு ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்.
ஐஞ்சிறு காப்பியம்: நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமாரகாவியம்.
ஐம்பொறி: மெய், வாய், கண், மூக்கு, செவி.
கவி வகை4 ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்.
கூலவகை8 : நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்.
கொடுந்தமிழ்நாடு: பொங்கநாடு, ஒளிநாடு,தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமாநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு.
இப்படி பலபொருள்களையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழ் மக்கள் இன்னும் சிலவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.
 இனி இலக்கிய சுவை

பள்ளு என்பது சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்று பள்ளு என்றால் பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்கு செய்யப்படும் உழவினையும் குறிக்கும். ஆகவே பள்ளு உழவர் இலக்கியம்.
  திருநெல்வேலிக்கு சிறிது வடகிழக்கில் தன்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்குமிடத்திற்கு பெயர் முக்கூடல். அங்கு உறையும் இறைவனான அழகர் மீது பாடப்பட்டது முக்கூடல் பள்ளு. அதில் தென்கரை நாட்டுவளம் குறித்து பாடப்பட்டதை கீழே காண்கிறோம்.

    காயக் கண்டது சூரிய காந்தி:
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்.
  மாயக்கண்டது நாழிகை வாரம்;
     மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்.

    சாயக்கண்டது காய்க்குலைச் செந்நெல்;
       தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்.
  தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்:
      சீவல மங்கைத் தென்கரை நாடே.

பொருள்:  வெயில் காயும்; வயிறுகாயாது. தயிர் கலங்கும்; மக்கள் மனங்கலங்க மாட்டார். நாழிகையும் வாரமும்  மாயும்; மக்கள் பசியால் மாயார். மறுகி ஓடுவது வெள்ளம்: மக்கள் மறுகி வாடார். தலைசாய்ந்து நிற்பது செந்நெல்; மக்கள் தலைகுனிய மாட்டார். தாபதராகிய முனிவர் தனித்திருப்பர்; கணவன் மனைவியர் தனித்திருக்க மாட்டார்கள். உரைக்க உரைக்க சந்தனம் தேயும். ஆனால் இச்செய்யுளில் பொருள் தேயாது.
    என்ன அழகான பாடல்! இத்தகைய அருமையான வளம் மிக்க நாடாய் நம் தமிழ் நாடு சிறப்புற்று விளங்கியதை இந்த பாடல்களில் அறிந்து கொள்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மேலும் அறிவோம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, June 15, 2013

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.


ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும் ஓர் சர்ச்சை எழுந்தது.அவர்களில் திறமை மிக்கவர் கணவனா மனைவியா என்பது தான் அது.
   அந்த சர்ச்சை முற்றி பெண்கள்தான் தந்திரத்தில் வல்லவர்கள், அவர்கள் நினைத்தால் ஆயிரம் தந்திரங்கள் செய்து ஆண்களை வெற்றிக் கொள்ள முடியும் என்றாள் மனைவி.அத்துடன் இல்லாமல் ஆண்கள் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். உங்கள் நல்ல காலம் இன்னும் உங்களை நான்  தந்திரம் ஏதும் செய்து இதுவரை ஏமாற்றவில்லை என்றாள் அவனது மனைவி.
   இதைக்கேட்ட கணவன் மிகுந்த கோபம் கொண்டான். உங்களுக்கு சமைப்பதை தவிர வேறு என்ன தெரியும்? உங்கள் தந்திரங்களை கண்டு ஏமாற நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ வேண்டுமானால் ஆயிரம் தந்திரங்கள் செய்து என்னை ஏமாற்றிக் காட்டு பார்க்கலாம். அப்போது நான் ஒத்துக்கொள்வேன் பெண்கள் புத்திசாலிகள் என்று சவால் விடுத்தான் கணவன்.
   அன்றைய பொழுது விடியும் நேரத்தில் கணவன் எழுந்திருக்கும் முன் எழுந்த அவனது மனைவி கணவன் அறியாமலேயே கடைக்குச் சென்று ஒரு பெரிய மீனை வாங்கி கணவன் அன்று உழப்போகும் வயலில் புதைத்து வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி ஒன்றும் அறியாதவள் போல படுத்துக் கொண்டாள்.
    பொழுது விடிந்ததும் விழித்த கணவன் காலைக் கடன்களை முடித்து வயலுக்கு சென்றான். ஏர் பூட்டி உழுதான். அப்போது அவனது மனைவி புதைத்து வைத்த மீன் கலப்பையில் சிக்கி வெளியே வந்தது. நிலத்தில் பெரிய மீன் கிடைத்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆகா! எவ்வளவு பெரிய மீன்! இதை இன்று சுவையாக ஆக்கி உண்டு மகிழலாம் என்று அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்ததே தவிர நிலத்தில் மீன் எப்படி கிடைக்கும் என்று புத்தி செயல்படவில்லை. அந்த மீனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
   மனைவியை அழைத்து நான் நிலத்தில் உழும்போது பெரிய மீன் கிடைத்தது. இதை சமைத்து வை! மதியம் உண்ணலாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் வயலுக்குச் சென்று விட்டான். மதிய நேரம் வந்தது.ஆகா! இன்று மீன்குழம்பு மனைவி சமைத்திருப்பாள்! ஒரு வெட்டு வெட்டலாம் என்று ஆவலோடு வந்தான் உழவன்.
  முகம் கால் கழுவி சாப்பிட உட்கார்ந்தான். உழவனின் மனைவி வழக்கம் போல பழைய சோறும் ஊறுகாயும் வைத்த போது உழவன் கடுப்பானான். ஏய்! நான் கொண்டுவந்த மீனை சமைக்க வில்லையா? என்று கத்தினான்.
   மீனா? ஏது? எப்போது கொண்டுவந்தீர்கள் என்று அப்பாவியாய் கேட்டாள் மனைவி.
  காலையில் நிலத்தை உழுதபோது பெரிய மீன் கிடைத்ததே! அதை சமைக்கச்சொல்லி உன்னிடம் கொடுத்தேனே? அதை சமைக்காமல் ஏமாற்றுகிறாயா? என்றான் உழவன்.
  நீங்கள் மீன் எதையும் கொண்டுவரவில்லை! திடீரென்று மீன் குழம்பு கேட்டால் நான் எங்கே போவேன்? என்று பதில் சொன்னாள் மனைவி.
  தன் மனைவி பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் அல்லது அவள் மட்டும் மீனை சமைத்து சாப்பிட்டு விட்டாள் என்று உழவனுக்கு கோபம் மனைவியை போட்டு உதைத்தான். உழவனின் மனைவி கத்திக் கொண்டே வெளியே வந்து ஐயோ! இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா?  என்று கூச்சல் போட்டு அழவும் கும்பல் கூடிவிட்டது.
    அப்போது கூட்டத்தில் ஒருவர் என்ன நடந்தது எதற்கு உன் மனைவியை போட்டு அடிக்கிறாய்? என்று கேட்டார்.
   நான் இன்று காலையில் நிலத்தை உழுத போது மீன் ஒன்று கிடைத்தது. அதை சமைத்து வைக்க சொன்னேன். அதை சமைத்து இவளே சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் பழைய சோறு போடுகிறாள் என்று சொன்னான் உழவன்.
   ஏய் மடையா! நிலத்தை உழும்போது மீன் கிடைக்குமா? இப்படி முட்டாள் தனமாக பேசாதே! உன் மனைவியிடம் அன்பாக நடந்துகொள் என்று அறிவுரை கூறினார் அந்த பெரியவர். வந்த எல்லோரும் சென்று விட்டனர். அப்போது அவன் மனைவி சட்டிக்குள் இருந்து ஒரு மீன் துண்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.
  இதைப்பார்த்த உழவனுக்கு ஆத்திரம்! எல்லோரும் என்னை முட்டாள் என்றார்களே! இவளை கையும் களவுமாக பிடித்துகொடுக்கிறேன் பார்! என்று வெளியே வந்து என்னை நம்ப மறுத்தீர்களே! இப்போது வாருங்கள் வீட்டில் என் மனைவி மீன் குழம்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கு தராமல் அவளே திண்ணவே ஏமாற்றுகிறாள் என்றான்.
  எல்லோரும் அவன் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இதற்குள் அவனது மனைவி சட்டியை எங்கோ மறைத்து வைத்து விட்டு. அழுது கொண்டே வெளியே வந்து இவர் என்னை அடித்து என் உடம்பெல்லாம் புண்ணாகிவிட்டது. இவர் மீனே கொண்டுவரவில்லை. இல்லாத மீனை எப்படி சமைப்பது நான் சொல்வதை நம்புங்கள் இவர் இப்படி என்னை கொடுமைப் படுத்தினால் சாவதை தவிர வேறு வழியில்லை! என்று அழுதாள்.
  கணவனோ, ஐயா மக்களே! இவள் பெரிய கைகாரியாக இருக்கிறாள் , நான் நிலத்திலிருந்து மீன் பிடித்து வந்தது உண்மை! அதை இவள் சமைத்து உண்டதும் உண்மை என் பேச்சை நம்புங்கள்! என்றான்.
   வந்திருந்த எல்லோரும் உழவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்! இவனுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது! இல்லை பேய் பிடித்து இருக்க வேண்டும். நிலத்தில் மீன் பிடித்ததாக உளறுவதோடு இல்லாமல் மனைவியை அடித்து நம்மையும் ஏமாற்றுகிறானே!  இவனை பிடித்த பேயை விரட்ட வேண்டும் என்று வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு விளாசினார்கள்.

  ஐயோ! அடிக்காதீங்க! நான் சொல்றது நிஜம்!  நிலத்தில் தான் பெரிய மீனை பிடித்தேன்! என்றான் உழவன்.
   விடாதீர்கள் இவன் பைத்தியம் தெளியும் வரை அல்லது பேய் ஓடும் வரை விடக்கூடாது என்று ஆளாளுக்கு வேப்பிலையிலும் துடைப்பத்திலும் உழவனை அடிக்க ஆரம்பித்தார்கள். அடேய்! என்னை நம்ப மறுக்கிறீர்களே! அநியாயமாக அடிக்கிறீர்களே! என்று அலறியபடி ஓடத்துவங்கினான் உழவன்.
  பேய்தான் ஓடுகிறது! இந்த ஊர் எல்லை வரை சென்று விரட்டி விட்டு வருவோம் என்று அவனை துரத்தினர் மக்கள். என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! இல்லை நான் மீன் பிடிக்க வில்லை! என் மனைவியை அடிக்க மாட்டேன் என்று கையெடுத்து வணங்கினான் உழவன்.
  இப்போதுதான் பேய் வழிக்கு வந்திருக்கிறது! ஆனாலும் இப்படியே விடக்கூடாது வேப்ப மரத்தில் இன்று முழுவதும் கட்டி வைப்போம்.  நாளை விடுவிப்போம் என்று அவனை கட்டி வைத்தார்கள்.
   மறுநாள் உழவன் தளர்ந்து இருந்தான். அவனை விடுவித்ததும் வீட்டிற்கு வந்தான். வலி தாங்க முடியாமல் ஐயோ! அம்மா! என்று முனகியபடியே இருந்த அவனை பார்த்து அவன் மனைவி சொன்னாள். ஒரே தந்திரம் தான் செய்தேன்! இதையே உங்களால் தாங்க முடியவில்லை! நான் ஆயிரம் தந்திரங்கள் செய்தால் நீங்கள் என்ன ஆவீர்களோ? இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள் பெண்கள் தந்திர சாலிகள் என்று  என்றாள்.
    சமைத்து வைத்த மீன் குழம்பையும் சோறையும் கணவனுக்கு போடவும் செய்தாள். கணவனும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். உண்மையிலேயே நீ ரொம்ப கெட்டிக் காரிதான்!  என்ற கணவன் ஆசையோடு குழம்பு சோறை உண்டு முடித்தான்.
 (செவிவழிக் கதை).
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, June 14, 2013

மனித ரத்தம் குடிக்கும் அதிசய பெண்மணி!

வாஷிங்டன்: பழங்கள், காய்கறிகளை ஜூஸ் போட்டு ஆவலுடன் குடிப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி 2 லிட்டர் மனித ரத்தத்தை ஜூஸ் போல குடிக்கிறார். அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில்தான் நடைபெற்றுவருகிறது. ரத்தம் குடிக்கும் இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனவாம். ரத்தப் பிரியையான அந்தப் பெண்ணின் பெயர் ஜூலியா கேப்லஸ் (45). இவரது கணவர் டொனால்டு லாசரோவிச். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வரும் இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரில் (24) என்ற மகளும், அலெக்ஸ் என்ற மகனும் உள்ளார். 

 இளம் வயதில் ஜூலியா காதலித்த போது தன் காதலனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உதட்டை கடித்துவிட்டார். காதலன் உதட்டில் இருந்து வந்த ரத்தத்தை அவர் உறிஞ்சி குடித்துள்ளார். ரத்தத்தின் சுவை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.


 காதலனின் ரத்தம் குடித்து ருசித்த அவர் தொடர்ந்து ரத்தம் குடிக்க ஆரம்பித்தார். கடந்த 30 ஆண்டுகளாக ஜூலியா ரத்தம் குடித்து வருகிறார். தினமும் 2 லிட்டர் ரத்தம் வரை அவர் ருசித்து விடுகிறாராம்.


 ஜூலியாவுக்கு ரத்தம் கொடுக்க ஏராளமான கொடையாளர்கள் தயாராக உள்ளனர். ரத்தம் கொடுக்க விரும்பும் நபர்களின் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் கத்தியால் கீறி அதில் வெளிவரும் ரத்தத்தை ஊசி உறிஞ்சி குடித்து விடுகிறார்.


 ஜூலியாவின் கணவர், பிள்ளைகள் எவ்வளவோ முயன்றும்கூட அவரது ரத்தம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ரத்த தானம் செய்பவர்கள் கிடைக்காத நேரத்தில் ரத்த வங்கிக்கு சென்று பணம் கொடுத்து ரத்தம் வாங்கி குடிக்கிறார்.


 ‘மனித ரத்தத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பது எனக்கு தெரியும். தினமும் ரத்தம் குடிப்பதால் நான் மிகவும் வலிமையாக, ஆரோக்கியமாக உள்ளேன். இதனால் நோய் தாக்குதலுக்கு உட்படாமல் அழகாக இருக்கிறேன்' என்கிறார் ஜூலியா. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி பிடிச்சிருக்கு போல.


 நன்றி: தட்ஸ் தமிழ்
Related Posts Plugin for WordPress, Blogger...